இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 3000 ஏக்கர் உப்பளங்கள் மூலம் தூத்துக்குடியில் ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கோடைக்காலத்தில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் 1,500 ரூபாயாக இருந்த ஒரு டன் உப்பு 5 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. உப்பளங்கள் மழைநீரில் மூழ்கி உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் 7 லட்சம் இருப்பு வைக்க வேண்டிய இடத்தில் 15 ஆயிரம் டன் உப்பு மட்டுமே இருப்பில் உள்ளது. இதனால் உப்பளங்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி மீண்டும் முழு வீச்சில் உப்பு உற்பத்தியை தொடங்கும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து உப்பு விலை பல மடங்கு உயரும் என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.