சென்னை புளியந்தோப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது “பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத அடிப்படையில்தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மின்கட்டணம் குறைவு. மத்திய அரசின் அழுத்தம், அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாகவே மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையில் பதிவுசெய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்இணைப்பு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தோம். ஒரே வருடத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த வருடம் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்இணைப்பு கொடுப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது. இதேபோன்று நிலைக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தோம். இப்போது மின்கட்டண மாற்றத்தின் வாயிலாக நிலைக் கட்டணத்தை ரத்துசெய்து இருக்கிறோம். தற்போது 2 மாதத்துக்கு ஒரு முறை வீடுவீடாக மின்கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது. இப்போது 1000 பணியாளர்கள் உள்ளதாக வைத்துக் கொண்டால் ஒவ்வொரு மாதமும் கணக்கெடுப்பதற்கு 2,000 பணியாளர்கள் தேவை. ஆகவே ஒவ்வொரு மாதமும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனில் பணியாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும். அத்துடன் புதியதாக வேலைக்கு ஆட்கள் எடுக்க வேண்டும்.
மின் மாற்றிகளுக்கும் (டிரான்ஸ்பார்மர்கள்) சேர்த்து மீட்டர் பொருத்துவது குறித்து சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இப்போது டெண்டர் நிலையில் இருக்கிறது. அதேபோன்று அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட்மீட்டர் பொருத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதற்குரிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்மீட்டர் பொருத்தப்பட்டால் கணக்கெடுக்கும் பணியாளர்களின் வேலை கேள்விக்குறி ஆகிவிடும். ஆகையால் இதில் எதாவது ஒன்று தான் கொண்டுவர முடியும். அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட்மீட்டர் பொருத்தப்பட்ட பின் கட்டாயம் தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி ஒவ்வொரு மாதமும் கணக்கீடு செயல்படுத்தப்படும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 வருடங்கள் கால அவகாசம் இருக்கிறது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று 14 மாதங்களாகிறது. இந்த 14 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதத்தை முதல்வர் நிறைவேற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மீதம் உள்ள 30 வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் 4 வருடங்கள் இருக்கிறது. 4 வருடங்களில் நிறைவேற்றவில்லை எனில், அடுத்த தேர்தலில் இது குறித்து கேள்வி எழுப்பலாம்” என்று அவர் கூறினார்.