தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக போதை, காவல் நண்பன் என்ற இரு குறும்படங்கள் வெளியீட்டு விழா காமராஜர் கல்லூரியில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் போதை, காவல் நண்பன் என்ற இரு குறும்படங்கள் வெளியீட்டு விழா காமராஜர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், கல்லூரி முதல்வர் நாகராஜன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தேசிய சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இயக்குனர் சாம்ராஜ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், சப் இன்ஸ்பெக்டர் உட்பட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொதுமக்களுக்கு கஞ்சா, மதுபானம், புகையிலை போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் போதை என்ற குறும்படமும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற வகையில் காவல்துறையின் அவசர உதவி எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் காவல் நண்பன் என்ற குறும்படமும் தயாரிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் இந்த குறும் படங்களை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பேசியதாவது, மாணவ மாணவிகள் உங்களுக்கு கல்விதான் முக்கியம். விளையாட்டில் எல்லைக்கு உட்பட்டு விதிமுறைகளைக் கடைப்பிடித்து விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதேபோன்று வாழ்க்கையிலும் நமக்கென ஒரு எல்லையை வகுத்து அதில் விதி முறைகளை கடைபிடித்து குறிக்கோளை அடைந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும். உயர்பதவியில் இருப்பவர்கள் பலர் கிராமத்திலிருந்து வந்தவர்கள் தான். அதுபோல உங்களுடைய நீங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் நல்ல செயல்களில் ஈடுபட்டு சிறப்பாக கல்வி பயின்று சாதனையாளராக வரவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.