நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 92 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரேவின் உத்தரவின்படி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து மாவட்டத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்கள், முந்தைய தேர்தல்களில் பிரச்சனைகளில் ஈடுபட்ட ரவுடிகளையும் முன்னெச்சரிக்கையாக கைது செய்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் மாவட்டத்தில் இதுவரை சுமார் 92 ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை ஆர்.டி.ஓ. முன்னிலையில் ஆஜர்படுத்தி, அடுத்த 6 மாதத்திற்கு எவ்வித குற்றசம்பவங்களிலும் ஈடுபட கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டு விடுவித்துள்ளனர். மேலும் கொலை, அடிதடி வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நபர்களையும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.