தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் 1070 என்ற தொலைபேசி எண் மூலம் மாநில கட்டுப்பாட்டு மையத்துக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தண்ணீர் சூழ்ந்துள்ள இடங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளேன். சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு படை,காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று முதல்வர் கூறியுள்ளார்.