சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்துள்ளார்.அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது, சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை 1,420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதிப்பு 55 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தொற்று பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி மட்டுமே இருக்கிறது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக ஐ.ஐ.டி. வளாகத்துக்குள்ளயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் அவர்களுக்கு தேவைப்படும்பட்சத்தில் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது.
இவர்கள் அனைவருக்கும் விடுதியின் மூலம் கொரோனா தொற்று பரவி இருப்பது தெரியவந்திருக்கிறது. தொற்று எங்கிருந்து வந்தது என்பதை விட, இனி தொற்று மேலும் பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதனால்தான் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் மக்கள் அனைவரும் இதேபோல் முககவசம் அணிய வேண்டும். படிப்படியாக தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ‘எக்ஸ்.இ’ வகை கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இதுவரை யாருக்கும் இல்லை.
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.ஐ.டி.யில் 514 பேரை பரிசோதித்ததில் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மளமளவென அதிகரித்தது. ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்கின்றனர். தற்போது அதிகரிக்கும் கொரோனா பரவல் அனைவருக்கும் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. எனவே, அனைவரும் கவனமாக இருந்து, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதல் 3 அலையில் இருந்த பதற்றம் தற்போது தேவை இல்லை. ஆனால் அதனை நினைவில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.