தமிழகத்தில் கொரோனா தொற்று 3-வது அலை பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (பிப்..19) நடைபெற இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் வரும் 22ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அதன்பின்பு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதனிடையில் வாக்குரிமை உள்ள அனைவரும் தேர்தல் தினத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அன்றைய நாள் பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலுள்ள தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட இடங்களில் பணி புரிந்து வரும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்க வேண்டும்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை 19ஆம் தேதி (இன்று) திறக்கப்பட இருக்கிறது. மேலும் மாவட்டத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்காத நிறுவனங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க 8807429192, 04562 252130 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்..