கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றுள்ள வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு கல்கி குழுமம் சார்பாக ”பராக் பராக் கல்கியின் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் பாதையில் ஒர் அனுபவ பயணம்” எனும் பெயரில் ஆவண படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படத்தின் முதல்பகுதி வெளியிட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. அப்போது கல்கி குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் லட்சுமி நடராஜன் வரவேற்று பேசினார். அவர் பேசியதாவது, பொன்னியின் செல்வன் கதையில் இடம் பெறும் இடங்களுக்கு நேரில சென்று படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
கலாசார பெருமைகளை கூறும் அடிப்படையிலும் பொன்னியின் செல்வனை கொண்டாடும் வகையிலும் சோழர்கால வாழ்வியலை பறைசாற்றி இளைய தலைமுறையினர் மனதில் சரித்திர வேட்கையை ஊட்டும் வகையிலும் இந்த ஆவணப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்” என்று கூறினார். அதன்பின் விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று ஆவணப் படத்தின் முதல் காணொளியை வெளியிட்டார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது, ”பொன்னியின் செல்வன் கதை நடந்துள்ள பாதையில் அனைவரையும் அழைத்து சென்று காணச்செய்யும் விதமாக இந்த ஆவணப் படம் தயாராகியுள்ளது.
பொன்னியின் செல்வன் கதை நடந்துள்ள 9ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் இடம்பெற்றுள்ள பல இடங்களுக்கு அழைத்து சென்று கதையின் உணர்வினை அனைவருக்கும் ஊட்டக்கூடிய அடிப்படையில் அற்புத பணியை செய்துள்ளனர். இந்த முயற்சி அபாரமானது ஆகும். தொடர்ச்சியாக 16 தினங்களுக்கு இந்த ஆவணப் படம் வர இருக்கிறது. இதனை பார்பவர்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக இருக்கும். தமிழகத்தின் வரலாற்றுக்கு நல்ல ஆவணமாக இது அமைந்து உள்ளது. தமிழக அரசும் இத்தகையை முயற்சியில் ஈடுபடவேண்டும் என சொல்வது நல்ல ஆலோசனை” என்று கூறினார்.