பொன்னியின் செல்வனில் நடித்துள்ள பிரபு அப்படத்தின் வெற்றியால் குஷியில் உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் திரையுலகிற்கு நல்ல காலம் பிறந்துள்ளது. ஏனெனில் அனைத்து படங்களும் வரிசையாக வெற்றி பெறுகிறது. கமல்ஹாசன் நடித்த விக்ரம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் உலகளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எம்.ஜி.ஆர். மற்றும் கமல்ஹாசன் எடுக்க முயன்றார்கள். பொன்னியின் செல்வன் கதையை என் தந்தை சிவாஜி கணேசன் 5 முறை படித்ததாக கூறுவார்.
அவருக்கும் பொன்னியின் செல்வன் கதை, படமானால் நடிக்க வேண்டும் எனும் ஆசை இருந்தது. இதற்கிடையில் அண்ணன் கமல் அதனை படமாக்க முயன்றபோது, வந்தியத்தேவன் வேடத்தில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என அப்பா யோசனை கூறினார். இந்நேரத்தில் யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை கூற விரும்புகிறேன். அது பொன்னியின் செல்வன் படப் பிடிப்பின்போது விக்ரம் பிரபுவிடம் மணிரத்னம் சொன்ன தகவல் ஆகும்.
அதாவது, “உங்க தாத்தாவை (சிவாஜி கணேசன்) வைத்து ஒரே ஒரு படமாவது இயக்கவேண்டும் என நான் ஆசைப்பட்டேன். இதனிடையில் நான் ஒரு தீவிரமான சிவாஜி ரசிகன். இது யாருக்குமே தெரியாது. அவரை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கும். பின் எங்கே போய் அவரிடம் கதை கூற முடியும்.” என்று கூறியிருக்கிறார். பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் படத்தை எப்போது பார்க்கலாம் என பொதுமக்கள் ஆசைப்படுகின்றனர். முதல் பாகத்தை போன்றே, 2ஆம் பாகமும் பெரிய வெற்றியடையும் என்று பேசினார்.