பொன்னியின் செல்வன் முதல்பாகம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் அப்படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் கலந்துகொண்டு பேசியதாவது, “இப்படத்தின் பிரமிப்பிலிருந்து வெளியேவந்து, அடுத்த படத்தில் கவனம் செலுத்துங்கள் என என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் கட்டளையிடும் அளவிற்கு இதில் மூழ்கியிருந்தேன். பொன்னியின் செல்வன் நாவலை வாசித்த ஒவ்வொரு வரும் ஆதித்யகரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை, அருள்மொழி வர்மன் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், கற்பனை செய்து வைத்திருந்த முகங்கள் எங்களின் முகமாக மாறி விட்டது.
இதனிடையில் நடிகர்களான நாங்கள், எத்தனையோ வேடத்தில் தோன்றி இருக்கிறோம். எனினும் வாசகர்களின் கற்பனையில் நீண்டகாலமாக இருந்த ஒரு முகமாக நாங்கள் மாற்றம் பெற்றிருப்பது என்பது புதிது ஆகும். இந்த திரைப்படத்தை பார்த்தபின் அனைவருக்கும் புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது” என்று பேசினார். அதன்பின் நடிகர் கார்த்தி பேசியதாவது, “பொன்னியின் செல்வன் படத்தில் சரித்திர கதாபாத்திரங்களில் நடித்த அனுபவங்களானது மனநிறைவை தருகிறது. இது தமிழ் திரையுலகின் படமல்ல, தமிழகத்தின் படம். இந்த திரைப்படத்தின் வாயிலாக மக்களின் ரசனை மேம்பட்டுள்ளது என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம்ரவி, இயக்குனர் மணிரத்னம், தயாரிப்பாளர்கள் சுபாஷ்கரன், தமிழ்குமரன் போன்றோரும் பேசினர்.