Categories
சினிமா

பொன்னியின் செல்வன்: விறுவிறுப்பு நிறைந்த கதையின் ஓர் அலசல்….!!!!

பொன்னியின் செல்வன் கதை திருப்பங்கள், சதி, துரோகங்கள், சாகசங்கள் என பல விறுவிறுப்பு சம்பவங்கள் நிறைந்தது ஆகும். அதனை படித்தவர்கள் கதை நடைபெற்ற காலத்துக்கே சென்றது போன்ற உணர்வை பெற்றனர். ஆகவே பொன்னியின் செல்வன் திரைப்படமும் அந்த உணர்வை ஏற்படுத்துமா..? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. பொன்னியின் செல்வன் மொத்த கதைக்கும் மையப் புள்ளியாக இருப்பது படுத்த படுக்கையாக இருக்கும் சுந்தர சோழ மகாராஜாவும், அவரது சிம்மாசனமும் தான். இந்த கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் வருகிறார். இவர் தஞ்சையிலிருந்து நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். சுந்தர சோழருக்கு ஆதித்த கரி காலன், அருள்மொழி வர்மன் என்ற மகன்களும், குந்தவை என்ற மகளும் இருக்கின்றனர்.

அத்துடன் ஆதித்த கரிகாலன் காஞ்சிபுரத்தில் உள்ளார். அருள்மொழி வர்மன் இலங்கைக்கு போர் தொடுத்து சென்றிருக்கிறார். இவர்கள் கதாபாத்திரத்தில் முறையே விக்ரம், ஜெயம்ரவி, திரிஷா நடித்து இருக்கின்றனர். இதற்கிடையில் இன்னொரு அழுத்தமான கதாபாத்திரம் பெரிய பழுவேட்டரையராக வரும் நடிகர் சரத்குமார். சோழநாட்டில் வரி விதிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ள இவர் வயதான நிலையில் இளம் பெண் நந்தினியை திருமணம் செய்து தஞ்சைக்கு அழைத்து வருவதுடன் சுந்தர சோழரின் அண்ணன் மகன் மதுராந்தக சோழருக்கு முடிசூட்ட சதிசெய்கிறார். இதில் நந்தினியாக வரக்கூடிய ஐஸ்வர்யாராய் கதாபாத்திரமும் வில்லத்தனமானது ஆகும். தன் காதலர் வீர பாண்டியன் தலையை விக்ரம் கொய்ததால் பெரிய பழுவேட்டரையரை பயன்படுத்தி ஒட்டு மொத்த சோழ பேரரசையும் அழிக்க துடிக்கிறார்.

இதற்கெனவே பழுவேட்டரையரை மணக்கிறார். அத்துடன் விக்ரம் இளம் வயதில் ஐஸ்வர்யாராயை காதலித்தவர் ஆவார். இதையடுத்து தஞ்சை கோட்டையை பாதுகாக்கும் சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் வருகிறார். இவர் அனுமதி இன்றி கோட்டைக்குள் யாரும் நுழைய இயலாது. பெரும்போர்களை நடத்தி வென்று வீரபாண்டியனை வெட்டிகொன்ற ஆதித்த கரிகாலனுக்கு எதிராக சூழும் பகையால் அவர் கொல்லப்படுவதோடு முதல்பாகம் முடியும் என தெரிகிறது. சோழ அரசுக்கு எதிராக சதி செய்யக்கூடிய ஐஸ்வர்யாராய்க்கும், சுந்தர சோழருக்குமுள்ள உறவு கதையின் திருப்பமாக வரும். பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகனே வந்தியத் தேவன்தான். இக்கதாபாத்திரத்தில் கார்த்தி வருகிறார்.

இவர் சுந்தர சோழருக்கும், குந்தவைக்கும், ஆதித்த கரிகாலனான விக்ரம் கொடுத்து அனுப்பும் ஓலைகளுடன் சோழநாட்டுக்கு பயணப்படுவதில் இருந்து தான் கதையே விரிகிறது. அதன்பின் வந்தியத் தேவன் வரலாற்றில் வேங்கி நாட்டை சேர்ந்த கீழ சாளுக்கிய மரபினன். ஆதித்த கரிகாலனின் நண்பன் ஆவார். சோழ அரசுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறி அடிக்கும் சூத்திரதாரி. முழுகதையிலும் இவரது கதாபாத்திரம் விரிந்திருக்கும். கார்த்தியை கைதுசெய்ய பழுவேட்டரையர்கள் முயற்சிக்கும் போது அவற்றிலிருந்து இருந்து தப்புகிறார். இதற்கிடையில் குந்தவையை காதலிக்கிறார். நாட்டுக்கு பேராபத்து சூழ்ந்து இருக்கிறது உடனே புறப்பட்டுவா என அருள்மொழி வர்மனுக்கு குந்தவை அனுப்பும் ஓலையுடன் ஆபத்துக்களை எதிர் கொண்டு இலங்கையில் உள்ள அருள்மொழி வர்மனை அழைத்துவர வந்தியத்தேவன் புறப்பட்டுச் செல்வது பரபரப்பானவை ஆகும்.

இடையில் சோழஅரசை கவிழ்க்க ஐஸ்வர்யாராய் நகர்த்தும் காய்களை அசாத்திய நிர்வாகத் திறன்கொண்ட திரிஷா புத்திசாலித்தமாக தடுத்து நிறுத்துவது கதையின் சுவாரஸ்யம் ஆகும். இலங்கைக்கு வந்தியத் தேவனை அழைத்து போகும் படகோட்டி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து இருக்கிறார். இவர் யானையில் வரக்கூடிய காட்சிகள் ரசிகர்களை கைதட்டவைக்கும். அதன்பின் சோழ அரசின் ரகசிய ஒற்றனான ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் ஜெய ராம் வருகிறார். இவருடைய கதாபாத்திரம் நகைச்சுவையானது ஆகும். அதற்கேற்றாற்போல் தலையில் குடுமியும் தொந்தியுமாக இருக்கிறார். இறுதியில் நாடுதிரும்பும் அருள்மொழி வர்மன் மன்னராக முடிசூட்டிக் கொள்வார் என எதிர்பார்க்கும் நிலையில், உத்தம சோழனுக்கு முடிசூட்டுகிறார். உத்தமசோழன் யார் எனும் முடிச்சு கதையின் திருப்பமாக அமையும். வானதியாக நடிகை சோபிதா துலிபாலா, பெரிய வேளாளராக பிரபு, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, சேந்தன் அமுதனாக அஸ்வின், ரவிதாசனாக கிஷோர், வீரபாண்டியனாக நாசர், சோமன் சாம்பவனாக ரியாஸ் கான், மதுராந்தகனாக ரகுமான் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர்.

Categories

Tech |