சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை போன்றவைகளை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து, கோவையில் அ.தி.மு.க சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (டிச.2) நடந்தது. கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது “தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகிறது.
இந்த 18 மாதகால ஆட்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு என்ன நன்மை கிடைத்து இருக்கிறது. எந்த புது திட்டங்களையும் இந்த அரசு கொண்டுவரவில்லை. ஆனால் எங்கள் மீது வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு பிரசாரத்தை பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். ஆகவே அதனை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். குடும்ப ஆட்சி நடத்துகிற முதலமைச்சருக்கு அ.தி.மு.க பற்றி பேசுவதற்கு எத்தகுதியும், அருகதையும் கிடையாது. அ.தி.மு.க-வை விமர்சனம் செய்வதற்கு ஒரு யோக்கியதை வேண்டும்” என்று பேசினார்.