Categories
தேசிய செய்திகள்

பொய்யான விளம்பரம் செய்தால் 5 வருடம் சிறை, ரூ.50 லட்சம் அபராதம் – மத்திய அரசு உத்தரவு!

அழகு சாதன பொருட்கள் குறித்த விளம்பரங்கள் உண்மைக்கு புறம்பாக விளம்பரப்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதற்கு புதிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு  கொண்டு வந்துள்ளது.  

சொட்டை தலையில் முடி வளரவேண்டுமா? எங்களுடைய கிரீமை தொடர்ந்து பயன்படுத்தினால் இரண்டு வாரத்தில் முகம் பொலிவு பெறும். இந்த மாத்திரையை தொடர்ந்து உட்கொண்டால் உடனே அஜீரணம் சரியாகும். கருமையான நிறத்தைப் போக்கி வெண்மையாக ஆக்கவேண்டுமா? உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான சதையைக் குறைக்க வேண்டுமா? ஒரே வாரத்தில் உடல் எடையை அதிகரிக்க விருப்பமா? இது போன்ற வார்த்தைகளை கேட்காமல் நம் நாட்கள் நிறைவடையாது.

அப்படி தினமும் 100 முறை பொருட்களை விளம்பரம் செய்து விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த விளம்பரத்தில் கூறுவது உண்மையா? பொய்யா? என யாருக்கும் தெரியாது. ஆனால் இதனை நம்பி வாங்கி பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளையும் அவ்வப்போது எழுந்து வருகிறது. இது போன்ற பிரச்சினைகளை தடுக்க கடந்த 1954ம் ஆண்டே மருந்து விளம்பரங்கள் கட்டுப்பாட்டு சட்டம் இயற்றப்பட்டது. 

இந்த சட்டத்தின் படி முதல் முறை குற்றத்திற்கு அபராதம் ஏதுமின்றி 6 மாதங்கள் சிறை தண்டனை மட்டும் விதிக்கப்படுகிறது. இதனை கண்டுகொள்ளாத நிறுவனங்கள் பல பொய்யான விளம்பரங்களை தொடர்ந்து செய்து வருகிறது இதனால் இந்த சட்டத்தில் தற்போது மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது அதன்படி இனி விளம்பரங்களில் இல்லாத ஒன்றை சொல்லி விற்பனை செய்யக் கூடாது. 

அப்படி செய்தால் முதல்முறைக்கு 2 ஆண்டு சிறையும் 10 லட்சம் அபராதமும்,  அடுத்தடுத்த முறைகளில் 5 ஆண்டு சிறையும் 50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்த மசோதாவில், அதிசயம், அற்புதம் என ஒளி வடிவிலோ, வீடியோவாகவோ அல்லது அட்டைப்படம், சுவரொட்டி, துண்டு பிரசுரம் என எந்த வகையிலும் சட்டத்திற்கு புறம்பாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

Categories

Tech |