Categories
தேசிய செய்திகள்

“பொய் குப்பைகளை சுத்தம் செய்யலாமே”… மத்திய அரசை விமர்சித்த ராகுல் காந்தி…!!

தேசத்திலுள்ள பொய்களை சுத்தம் செய்ய முன் வரலாமே என பிரதமர் மோடி அரசை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரதினம் வருவதை முன்னிட்டு, ” குப்பைகள் இல்லா தேசம்” என்ற ஒரு வார இயக்கத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் மக்கள் அனைவரும் குப்பைகள் இல்லா இந்தியாவை உருவாக்க உறுதி மொழி எடுத்து செயல்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து பிரதமர் அலுவலகமும், “கார்பேஜ் குவிட் இந்தியா” என்ற தலைப்பில் ட்வீட் செய்திருந்தது. இந்த ட்விட்டிற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ” ஏன் கூடாது? நாம் ஒரு அடி முன்னே சென்று தேசத்தில் அதிகரித்துவரும் பொய்களின் குப்பைகளையும் சுத்தம் செய்ய முன் வரலாமே. சீனாவின் ஆக்கிரமிப்பு உண்மைகளை கூறுவதற்கு பிரதமர் ஏன் சத்யாகிரகம் இருக்கிறார்?” என கேள்வி கேட்டு பதிவிட்டிருந்தார்.

அதன்பின் அவர் பதிவிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அறிக்கை நீக்கப்பட்டு இருப்பது பற்றியும் கண்டனம் தெரிவித்தார். மேலும் சென்ற மே மாதம் மத்திய பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் சீனாவின் அத்துமீறல் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிக்கை பற்றி ஊடகங்களில் செய்தி வெளியானதும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதனை தனது இணையதள பக்கத்தில் இருந்து நேற்று நீக்கிவிட்டது. இது பற்றி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இது ஒன்றும் தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல. ஆனால் ஜனநாயகத்துக்கு விரோதமான பரிசோதனையாகும். எப்பொழுதெல்லாம் தேசம் உணர்ச்சிவசப்படுமோ, அப்பொழுது கோப்புகள் ஆவணங்கள் மறைந்து போய்விடும். அதாவது மல்லையா, ரபேல் போர் விமானம், நிரவ் மோடி, மேகுல் சோக்சி மீதான வழக்குகளும் அப்படித்தான் இருக்கின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |