கடந்த சில வருடங்களாக யூடியூப் மூலம் தமிழக இளைஞர்கள், மாணவர்களுக்கு அரசியல் வகுப்பு, அரசியல் அறிவு, சமூகப் பார்வை, பொருளாதாரப் பார்வை என பல தரவுகளை விளக்கி பலரிடமும் பாராட்டப் பெற்றவர் இணைய ஆசிரியர் மாரிதாஸ். இவர் யூடியூப் மூலமாக உலகலாவிய கருத்துக்களை தமிழக மாணவர்களுக்கு தெரிவித்து வருகிறார். இதனால் இவருக்கு என்று ஒரு தனி கூட்டமே உண்டு. இவர் எப்போது வீடியோ பதிவிடுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் வகையில் பலரின் மனதில் இடம் பிடித்துள்ளார் மாரிதாஸ்.
சில நேரங்களில் இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகி, விமர்சிக்கப்பட்டு, விவாதத்துக்குள்ளாகி வழக்கு வரை சென்ற வரலாறும் உண்டு. இப்படி இவர் சொல்லிய கருத்துக்கள் வழக்குகளை சந்திக்கும்போதெல்லாம் இவரின் ஆதரவாளர்கள் ட்விட்டர் மூலமாக மாரிதாஸுக்கு ஹாஷ்டாக் போட்டு ஆதரவு தெரிவித்ததையும் நாம் பார்த்திருப்போம். அந்த வகையில்தான் தற்போது மீண்டும் அவர் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் இருக்கும் ஊடகங்கள் ஒரு சார்புடைய ஊடகங்கள் என்றும், அது நடுநிலையை தவறு இருப்பதாகவும், குறிப்பிட்ட அரசியல் கட்சியை வெற்றி பெற வைக்க இயங்குவதாகவும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வீடியோ வெளிட்டு இருந்தார். அதில், தான் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நான் புகார் தெரிவித்து உள்ளேன். நீங்கள் அனைவரும் புகாரை தெரிவிக்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களுக்கு வீடியோ மூலமாக அறிவுறுத்தி இருந்தார்.
இந்த வீடியோ பரபரப்பாக பேசப்பட்டது. இவரின் விமர்சனம் செய்தி துறையில் இருப்பவர்களை கடுமையாக ஆத்திரமூட்டியது. மாரிதாஸின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையிலும் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். டுவிட்டரில் சேவ் மீடியா என்ற ஹேஷ்டாக் வைரல் ஆகியது. இதைத்தொடர்ந்து நேற்று தன்னுடைய புகாருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளித்துள்ளது என்றும், இது முதல் கட்ட வெற்றி என்றும், முழுமையாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி, தனக்கு பதில் அனுப்பியுள்ளதாக ஒரு மெயிலை காட்டி தனது ஆதரவாளர்களுக்கு வீடியோவாக பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் இவர்…. தனக்கு யார் மெயில் அனுப்பினார் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த நபர்… அவரின் ட்விட்டர் பதிவில்…. எனது பெயரில் ஒரு போலி மின்னஞ்சல் ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்பில் பரவுகிறது. எனது அலுவலகம் இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மாரிதாஸ் சொல்லிய மின் அஞ்சலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதை அறிந்த பலரும் மாரிதாஸ் பொய்யை பரப்புகிறார், மாரிதாஸ் அவதூறு பரப்புகிறார், மாரிதாஸ் போட்டோஷாப் மூலமாக தவறான மெயிலை வடிவமைத்துள்ளார் என்று அடுக்கடுக்கான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
தற்போது இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. பேசுபொருளாக வலம் வந்து கொண்டிருக்கின்றது. இதற்கு என்ன பதில் அளிப்பார் ? என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மாரிதாஸ் இதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பர் என்றும் அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில் பொய்யான தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயன்று வருவதாக வினய் சரவாகி சொல்லி இருப்பதால் மாரிதாஸ் கைது செய்யப்படுவாரா ? என்ற கேள்விகள் பேசு பொருளாக மாறியுள்ளது.
There is a forged email in my name circulating on Twitter and WhatsApp. My office has initiated legal action in the matter.
— Vinay Sarawagi (@jagora) July 10, 2020