நடிகர் சூரி கொடுத்துள்ள புகார் பொய்யானது என்றும் அதை சட்டரீதியாக சந்திக்க தயார் என்றும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு சூரி நடித்த “வீர தீர சூரன்” என்ற திரைப்படத்திற்கான சம்பள பாக்கி 40 லட்சம் ரூபாயினை அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா ஆகியோர் தர மறுப்பதாக நடிகர் சூரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.மேலும் நிலம் வாங்கி தருவதாக கூறி 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் அவர்கள் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் ரமேஷ் குடவாலாவின் மகனான நடிகர் விஷ்ணு விஷால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும் என் தந்தை மீது வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டு எனக்கு அதிர்ச்சியும்,வருத்தத்தையையும் அளிக்கின்றது எனவும் கூறியுள்ளார்.மேலும் நடிகர் சூரிதான் விஷ்ணு விஷால் ஸ்டுடியோவிற்கு கவரிமான் என்ற திரைப்படத்திற்காக வாங்கப்பட்ட அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுக்க வேண்டியுள்ளது என பதில் குற்றசாட்டை வைத்துள்ளார். மேலும் இவ்வழக்கினை நாங்கள் சட்டப்படி சந்தித்து நீதி பெறுவோம் எனவும் கூறியுள்ளார்.கூடவே உண்மை ஒருநாள் வெல்லும் என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார்.