தமிழக அரசு பொய் கூறுவதாக கூட்டணி கட்சியே கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் திருவாரூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மட்டுமல்லாமல் வீடுகள், சுகாதார நிலையங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் கட்டடங்கள் பெருமளவு பழுதடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 10 ஆயிரம் ஏக்கர் குறுவை, 30 ஆயிரம் ஏக்கர் தாளடி, 25 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்த பயிர்கள் அத்தனையும் மழை வெள்ளத்தால் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
விவசாயிகள் ஹெக்டர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஏக்கருக்கு ரூபாய் 30,000 உயர்த்தி வழங்க வேண்டும். 430 ஊராட்சிகளில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்து நிவாரண தொகை வழங்க வேண்டும் .அதேபோல நாகை மாவட்டத்தில் வயல்வெளிகள் வெள்ளக்காடாக காட்சி தருகின்றது. 33 சதவீதம் பயிர் சேதம் என அரசு பொய்யான தகவலை தெரிவிப்பது சரி அல்ல. 60 சதவீதத்திற்கு மேல் பயிர் சேதம் அடைந்திருக்கிறது. தமிழக அரசு நீரியல் நிபுணர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்த குழு நீர்வள ஆதாரங்கள் குறித்தும் பாசன கட்டமைப்புகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.