Categories
மாநில செய்திகள்

பொறியியல் கல்லூரிகளிடம் தரம் இல்லையா? – தேர்ச்சி விழுக்காட்டால் கடும் அதிர்ச்சி …!!

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விழுக்காடு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு என்ன காரணம் ? என்பது குறித்த ஒரு செய்தித் தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் முடிவுகளின் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதில் ஒவ்வொரு கல்லூரிகளின் தேர்ச்சி விழுக்காடு தரப்பட்டுள்ளது. வழக்கமாகவே பொறியியல் கல்லூரிகளில் தரமில்லை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, தரமான ஆசிரியர்கள் இல்லை என்ற பார்வை பரவலாக முன்வைக்கப்படுகிறது. இது பற்றி கல்வியாளர் நடத்திய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் முன்னணி கல்வி நிறுவனமான கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட முதல் 50 கல்லூரிகளில் படிக்க கூடிய மாணவர்கள் கூட 100 விழுக்காடு தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. 80 முதல் 90 விழுக்காடு வரையிலான தேர்ச்சியை வெறும் இரண்டே இரண்டு கல்லூரிகள் தான் பெற்றுள்ளன. 70 முதல் 80 விழுக்காடு தேர்ச்சியை 10 கல்லூரிகளும், 60 முதல் 70 விழுக்காடு தேர்ச்சியை 15 கல்லூரிகளும் பெற்றிருக்கின்றன. 50 முதல் 60 விழுக்காடு தேர்ச்சியை 30 கல்லூரிகள் பெற்றுள்ளன.

இதற்கும் கீழாக இடம்பெற்றுள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது. அதாவது 386 கல்லூரிகள் 50 விழுக்காடு மற்றும் அதற்கு கீழான தேர்ச்சி பெற்று இருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பட்டியலில் 443 கல்லூரிகளில் 50 விழுக்காட்டிற்கு மேல் தேர்ச்சியை வெறும் 57 கல்லூரிகள் மட்டுமே பெற்று இருக்கின்றன என்பது அதிரவைக்கும் தகவலாக உள்ளது.

இதன் மூலம் முழுமையான உள்கட்டமைப்பு வசதிகள், தரம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்ட கல்லூரிகளிலும் மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி பெறவில்லை என்பது இந்த முடிவுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. பள்ளி அளவில் மாணவர்களை தரம் மிக்கவர்களாக உருவாக்காமல், தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிப்பதற்காக அதிக மதிப்பெண்களை வழங்கி மாணவர்களை தேர்ச்சி அடைய செய்வது கல்லூரிகளில் அவர்களை திணற வைக்கிறது என்பது பல்கலைக்கழக பேராசிரியர்களின் கருத்தாக இருக்கிறது.

Categories

Tech |