தமிழகத்தில் கடந்த ஜூன் 20ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து கல்லூரிகளில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி பொறியியல் படிப்பில் சேர கடந்த 20ஆம் தேதி முதல் மாணவ மாணவிகள் https://www.tneaonline.org/என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பொறியியல் படிப்பு இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. அதன்படி டிப்ளமோ, பிஎஸ்சி மற்றும் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பில் சேர தகுதி உடையவர்கள். இந்த கல்வி தகுதி பெற்றவர்கள் பொறியியல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அண்ணா பல்கலைத்துறை மற்றும் உறுப்பு கல்லூரிகள், அண்ணா பல்கலை மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் விருப்பமுள்ளோர் ஜூலை 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமல்லாமல் வருகின்ற ஆகஸ்ட் 16 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்த விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.