தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பொறியியல் படிப்புகளுக்கான 3,5,7வது செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடந்தது. ஆனால் அந்தத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்களின் முடிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக் கழகம் தெரிவித்தது. பாதி மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர்களின் பாதிப் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
அதனால் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இளநிலை படிப்புக்கான தேர்வுகள் இன்று முதல் ஜூலை 28 வரையும், முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் ஜூன் 24 முதல் ஜூலை20 வரையும் நடைபெறும். மேலும் விரிவான தேர்வு கால அட்டவணை உள்ளிட்ட விவரங்களை www.annauniv.edu என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.
இதனை அடுத்து தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. இன்று தொடங்கும் மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை acoe.annauniv.edu என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.