பொறியியல் படிப்புகளில் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கைகான கல்வித்தகுதிகளை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கல்விப்பிரிவு ஆலோசகா் ரமேஷ் உன்னி கிருஷ்ணன் அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், பிஇ, பிடெக் ஆகிய பொறியியல் படிப்புகளில் நேரடி 2-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கல்வித்தகுதிகள் விபரங்கள் தற்போது வழங்கப்படுகின்றன. இதில் பி.எஸ்சி., அல்லது பொறியியல் பட்டய (டிப்ளமோ) படிப்புகளில் குறைந்தபட்சமாக 45% மதிப்பெண்ணுடன் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு நேரடியாக 2-ம் ஆண்டு சோ்க்கை வழங்கலாம்.
இதையடுத்து எஸ்சி, எஸ்டி பிரிவினா் மட்டும் 40% மதிப்பெண் பெற்றால் போதுமானது. அதேபோன்று இளநிலை (அல்லது) பட்டய தொழிற் கல்வி படிப்புகளில் தோ்ச்சி அடைந்த மாணவா்களையும் பொறியியல் படிப்புகளில் நேரடி 2-ம் ஆண்டு சோ்க்கைக்கு அனுமதிக்க வேண்டும். அந்த மாணவா்களுக்கு கணிதம், இயற்பியல், அடிப்படை பொறியியல் படிப்புகள் குறித்த சிறப்புப் பயிற்சிகளை (பிரிட்ஜ் கோா்ஸ்) கல்விநிறுவனங்கள் வழங்க வேண்டும்.