சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுப் பிரிவு மாணவர்கள் 1,36,973 பேருக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக தரவரிசை பட்டியலில் முதல் 14788 வரை இடம்பெற்ற நபர்களுக்கு மட்டும் இன்று முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். இதையடுத்து இரண்டாவது சுற்று கலந்தாய்வு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைப்போலவே தொழிற்கல்வி பிரிவில் உள்ள மாணவர்களுக்கும் இன்று முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. மேலும் சென்ற வாரம் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 6,642 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.