பால்வளத்துறை அமைச்சர் நாசர் சிவகங்கையில் ஆவின் பால் பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பால் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆவின் நிறுவனத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.
இதனால் அப்போது பணியில் சேர்க்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டு தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் அதற்கான புதிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் விதிகளை மீறி பணியில் முறைகேடாக சேர்ந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் உட்பட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவினில் முறைகேடாக பணி பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இது முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் விதமாக உள்ளதாக ஆவின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.