முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மாணவர்களின் கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதில் உறுதியாக உள்ளது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து நீட் விவகாரம் தொடர்பில் கோரிக்கை விடுத்தார். அதேபோல் தமிழக எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்யமாறு வலியுறுத்த முயற்சி செய்தனர்.
ஆனால் அவரோ ஐந்து நிமிடம் கூட சந்திக்க நேரம் ஒதுக்காததால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்குமாறு திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு தமிழக ஆளுநர் தான் நீட் மசோதா நிலுவையில் இருப்பதற்கு காரணம் அவர் மத்திய அரசுக்கு மசோதாவை அனுப்பி வைக்கவில்லை என்று சரமாரியாக சாடினார்.
அதேபோல் அமித்ஷா தமிழக எம்.பிக்களை சந்திக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறினார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கார்னர் செய்வதை விட்டுவிட்டு டி.ஆர்.பாலு ஆளுநரை மட்டும் கண்டித்ததற்காக அவரைக் கடிந்து பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நீட் விவகாரம் தொடர்பில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமித்ஷாவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இன்று நீட் விவகாரம் தொடர்பாக பேச அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீட் தேர்வு போன்ற நுழைவு தேர்வுகளுக்கு எதிரான போராட்டத்தில் முனையளவு கூட பின்வாங்காமல் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் நடக்கும் என்று திமுக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில, மத்திய அரசுகள் இடையே நீட் விவகாரம் அனலாய் கிளம்பியுள்ளது.