போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின், 4-வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த மே 12-ந் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் கே.கோபால் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பஸ்களின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பேட்டாவை நிர்ணயம் செய்திட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
அதன்படி, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண பயண கட்டண பஸ்களில் பெண்கள் இலவச பஸ் பயணம் செய்ய அனுமதித்ததை தொடர்ந்து ஓட்டுனர், நடத்துனர்கள் பெற்று வந்த வசூல்படி குறைவினை ஈடுகட்டும் வகையில் அதனை உயர்த்தி முறைப்படுத்தி வழங்கும் வகையில் சாதாரண கட்டண பஸ்களின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும்” என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.