தமிழகத்தில் அரசு பேருந்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு இனி 4 வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நேற்று அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்திற்கான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு 14வது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 2019 ஆம் படி உள்ள நிரந்தர தொழிலாளர்களுக்கு பே மெட்ரிக் எனும் மூத்தோர் இளையோர் விகிதத்தின் அடிப்படையில் ஐந்து சதவீதம் உயர்வு அளித்து அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாயும் அதிகபட்சமாக 7000 ரூபாயும் உயர்வு கிடைக்கும். மலைப்பகுதிகளில் பணிபுரிவோருக்கு மாதம் 3000 ரூபாய் படி வழங்கப்படும்.இறந்த பணியாளரின் குடும்ப நல நிதி 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். மேலும் இனி ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.