போக்குவரத்து கழகங்களில் வேறுபாடுகளை தவிர்ப்பதற்காக தனிக்குழு அமைப்பதற்கான அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 6-ம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த பேச்சு வார்த்தையில் போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட தண்டனைகள், விடுமுறைகளை மாற்றம் செய்து ஒரே மாதிரியான உத்தரவை பிறப்பிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கத்தினர் பேசி வந்தனர்.
இந்நிலையில் போக்குவரத்துக் கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட தண்டனைகள், விதிமுறைகள் மாற்றம் செய்து ஒரே மாதிரியான உத்தரவு பிறப்பிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. எல்.பி.எப், சிஐடியூ, டி.டி.எஸ்.எப். ஆகிய தொழிற்சங்க பிரதிநிதிகளும் இந்த குழுவில் பங்கேற்பதாக போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.