ஆபத்தை உணராமல் மாணவ-மாணவிகள் காட்டாற்றை கடந்து செல்வதால் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாக்கம்பாளையம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாக்கம்பாளையம் செல்லும் வழியில் இருக்கும் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கும் சாலை சேரும், சகதியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் அரசு பேருந்து சர்க்கரை பள்ளம் வரை சென்று விட்டு பயணிகளை கீழே இறக்கிவிட்டு திரும்ப சென்று விடுகிறது.
இதனால் கோம்பை தொட்டி, கோம்பையூர், மாக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் காட்டாற்றில் வெள்ள நீர் வடிந்த பிறகு குழந்தைகளை தூக்கி கொண்டு கடக்கின்றனர். மேலும் மாணவ- மாணவிகள் ஆபத்தை உணராமல் கைகோர்த்தபடி வெள்ளத்தை கடந்து செல்வதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே காட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.