போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்ட வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் அதிக அளவில் பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் படிக்கும் பல மாணவ-மாணவிகள் ஆட்டோ மூலமாக பள்ளிக்குச் செல்கின்றனர். இந்நிலையில் சில ஆட்டோக்கள் அதிக அளவு மாணவர்களை ஏற்றிச் செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் விதிகளை மீறி செயல்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்குமாறு போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு காவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவின்படி மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது சில ஆட்டோக்கள் விதிகளை மீறி அதிக அளவில் மாணவ மாணவிகளை ஏற்றி வந்துள்ளனர். இந்த ஆட்டோக்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். ஒரு ஆட்டோவுக்கு ரூபாய் 600 வீதம் மொத்தம் 15 ஆட்டோக்களுக்கு 9,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.