போக்சோ வழக்கில் கைதான ஆசிரியரை விடுவிக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள புலியூரில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விசாரித்ததில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்க்கும் பாபு என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவி கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பாபுவை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் மாணவி ஆசிரியர் பாபு மீது பொய் புகார் அளித்திருப்பதாகவும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பள்ளி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த பிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு சென்றனர்.