தமிழகத்தில் போக்சோ பிரிவுகளில் பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்களை வழக்கமான முறையில் செய்வது போல வீடியோ பதிவு செய்யக் கூடாது என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அனைத்து கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பாலியல் குற்றம் தொடர்பான போக்சோ சட்ட வழக்குகளில், முதல் தகவல் அறிக்கை நகலை, சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு வழங்க வேண்டும்.
அது மரணமாக இருந்தாலும், பிற குற்றங்களாக இருந்தாலும் நீதிமன்றத்திற்கு சென்றடைந்தவுடன் உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து விசாரணை அதிகாரிகளும், இந்திய தண்டனை சட்டம் அல்லது போக்சோ பிரிவுகளில் பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்களை பெறும்போது, வீடியோ பதிவு செய்யக் கூடாது. ஒவ்வொரு வழக்கையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.
போக்சோ வழக்குகளில் விசாரணை அதிகாரிகள், இடைக்கால நிவாரணம் பெறுவதற்கான உரிமை குறித்து, பாதிக்கப்பட்டவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ, சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தை அணுகி இழப்பீடு பெறலாம் என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை போக்சோ சட்ட வழக்குகளின் அனைத்து விசாரணை அதிகாரிகளாலும் கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டும். தவறும்பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.