பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர் நடிப்பில் அண்மையில் பிரம்மாஸ்திரா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஹீரோயின் ஆக ஆலியா பட் நடிக்க, அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கடந்த மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான பிரம்மாஸ்திரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.
இந்நிலையில் பிரம்மாஸ்ரா திரைப்படத்தின் 2-ம் பாகத்தில் கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான கன்னட நடிகர் யஷ்ஷை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக யஷ்க்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் யஷ் படத்தில் நடித்தால் மிகப்பெரிய தொகைக்கு படத்தை வியாபாரம் செய்துவிடலாம் என படக் குழுவினர் நினைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.