தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த 9-ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் ஆனது.
இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே விசாரணையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் வெளியானதாக தெரிய வந்தது. அதன் பிறகு பள்ளிக்கல்வித்துறை இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு இயற்பியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியாகி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. எனவே மாணவர்கள், பெற்றோர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். பொதுத்தேர்வு எழுதுவதற்காக மாணவர்களை தயார்படுத்தவே இந்த திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.