சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் இயங்கும் மாநில பொதுசுகாதார ஆய்வகத்தில் 4 கோடி மதிப்பீட்டில் மரபணு பகுப்பாய்வு கூடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கூடத்தை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூட்டமைப்பு கொரோனா மரபணு பகுப்பாய்வு கூடமாக அங்கீகரித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்றினை உருவாக்கும் வைரஸ் அதனுடைய மரபணுவில் உண்டாக்கும் தொடர் மாற்றத்தினால் புதுவகையான வைரஸ் உருமாறி நோய்த்தொற்றின் தாக்கத்தை தீவிரமாக்குகிறது. எனவே உருமாறிய வைரஸ்களை கண்டறிய மரபணு பகுப்பாய்வு அவசியம். இத்தகைய மரபணு ஆய்வகம் எந்த ஒரு மாநில அரசாலும் இதுவரை அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் உருமாற்றத்தை கண்டறிய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பெங்களூருவில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு கொரோனா மாதிரிகள் அனுப்பப்பட்டு பகுப்பாய்வு முடிவுகள் தாமதமாக பெறப்பட்டு வந்தன.
இந்த நிலையில் சென்னையில் முதல்வரால் மரபணு பகுப்பாய்வு கூடம் தொடங்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில் அதற்குரிய அங்கீகாரம் மத்திய அரசால் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தில் உருமாறிய கொரோனா வைரஸை ஆரம்ப நிலையிலேயே விரைவாக கண்டறிந்து நோயின் தாக்கத்தை பெருமளவு தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.