தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 04/03/2022 நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் நடந்து முடிந்த மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் திமுக சார்பில் சென்னை மேயர் பிரியா ராஜன், கோவை மேயர் கல்பனா உட்பட 11 பெண் மேயர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் தவிர திருச்சி, தூத்துக்குடி, காஞ்சி உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் 5 பெண் துணை மேயர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாமன்ற உறுப்பினர்களாக 50% பெண்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.