மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
அதன்படி, விதிமுறைகளை மீறி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களைக் கண்டறிந்து புகார் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் வழங்கி ஊக்குவிக்கவுள்ளோம். இது தொடர்பாக விரைவில் சட்டம் ஒன்றை இயற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விதிமுறைகளை மீறி சாலையில் வாகனம் நிறுத்தப்படும் காரணத்தால் டெல்லி பெருநகரங்களில் பெரும் சிக்கல்கள் ஏற்படுகிறது. இதைத் தடுக்க கனரக வாகனங்களின் இயக்கங்களை நகரின் மையப்பகுதிகளில் கட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அத்துடன், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டப்பணிகளுக்காக சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியை பல்வேறு வங்கிகள் அளிக்கத் தயாராக உள்ளன” என்றார்.