பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் விளம்பரத்தில் இடம்பெற்ற பெண் தனக்கு தெரியாமல் தனது புகைப்படத்தை உபயோகப்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வீடு கட்டித்தரும் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் கிராமப்புறம், நகர்ப்புறம் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு பெண் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்து இருப்பார். சில நாட்களுக்கு முன்பு செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இந்த புகைப்படம் இடம் பெற்று இருந்தது. அதில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் அந்த பெண்ணுக்கு வீடு கிடைத்ததாகவும், 24 குடும்பங்கள் பயன் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் விளம்பரத்தில் இடம்பெற்ற அந்தப் பெண் கொல்கத்தாவை சேர்ந்த லட்சுமி தேவி என்பது தெரியவந்தது.
இது குறித்து அவரிடம் கேட்டபோது தனக்கு எந்த வீட்டையும் கொடுக்கவில்லை. தான் இன்னும் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன் என்று தெரிவித்தார். இந்த படத்தில் இருப்பது நான் தான் .ஆனால் என் படத்தை என் அனுமதி இன்றி உபயோகித்துள்ளார்கள் என்றும், எனக்கு வீடு எதுவும் வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.