இலவங்காய்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
இந்திய அளவில் மிகப்பெரிய இலவம்பஞ்சு சந்தை தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு மெத்தைகள் மற்றும் தலையணைகள் தயாரிக்கும் அலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றது. இதனையடுத்து இரண்டாவதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒருநூறாம் வயல், பத்து காணி, ஆறுகாணி, கூவைக்காடு, வில்லுசாரிமலை, காயக்கரை, வலியமலை, புறாவிளை, மணலோடை, கோலிஞ்சிமடம், மூக்கரைக்கள், மோதிரமலை போன்ற பழங்குடி கிராமங்களில் இலவம்பஞ்சு சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த இலவம் பஞ்சுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
இந்தப்பகுதியில் அறுவடை செய்யப்படும் 90% காய்கள் போடிக்கு எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில் இங்குள்ள பழங்குடி மக்கள் இந்த காய்களை பறித்து போடி வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். இதன்மூலம் வருடத்திற்கு 75 லட்சம் முதல் 1 கோடி வரை லாபம் கிடைக்கிறது. ஆனால் இந்த காய்களை பறிப்பதற்கும், மரத்தில் ஏறுவதற்கும் அதிக செலவுகள் ஆகிறது. ஆனால் அதற்கு தகுந்தார்போல் போதிய வருமானம் வரவில்லை எனவும், இலவம் காய்களில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை எனவும் கடையால் கவுன்சிலர் ரெகுகாணி கூறியுள்ளார்.
மேலும் இந்தோனேசியா நாட்டிலிருந்து குறைந்த விலைக்கு இலவம்பஞ்சு மெத்தைகள் மற்றும் செயற்கை பஞ்சுகள் இறக்குமதி ஆவதால் இலவம்காய் கொள்முதல் குறைந்துள்ளதாக போடி வியாபாரி சிவராஜ் என்பவர் கூறியுள்ளார். எனவே இலவங்காய் நடவை அரசு ஆதரித்து அதற்கு உரிய வருமானம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.