போதைக்கு காரணங்களை தேடாதீர்கள்.. பிரச்சனைகளுக்கு தீர்வை தேடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருள் விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்றைய தினம் இதே கலைவாணர் அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
காலையில் 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரைக்கும் நடைபெற்றது. அதில் அறிவுரைகள், ஆலோசனைகள் கருத்துக்கள், என்ன நிலைமை என்பது பற்றி எல்லாம் அலசி ஆராய்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க அதற்குரிய திட்டங்களை தீட்டி இருக்கிறோம். எனவே காவல் நிலைய எல்லையில் போதை மற்றும் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்து விட்டோம் என்று ஒவ்வொரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் உறுதி எடுத்துக் கொண்டால் நிச்சயம் போதை நடமாட முடியாது என்று நான் சுட்டிக்காட்டி பேசி இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் போதை என்பது சமூகத்தையே அழித்து விடும்.. பெரும்பாலும் தனக்கு வந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக போதையை பலர் நாடுகின்றனர்.. படிப்பு சரியா வரல, மனக் கவலை ஏற்படுகிறது.. வாழ பிடிக்கவில்லை என எத்தனையோ காரணங்களை சொல்லிக்கிட்டு இருக்காங்க.. இந்த காரணங்களுக்கு எந்த பொருளும் கிடையாது, போதைக்கு காரணங்களை தேடாதீர்கள்.. பிரச்சனைகளுக்கு தீர்வை தேடுங்கள்.. அதனுடைய முடிவில் வெற்றி காத்திருக்கும்.. வெற்றியை சுவைக்க தொடங்கி விட்டால் அதுவே உங்களை பல உயரங்களை கொண்டு செல்லும்.
மாறாக போதை பொருட்களை பயன்படுத்துவதால் பிரச்சனைகள் அதிகமாகுமே தவிர குறையாது.. ஒரு பிரச்சனையில் இருந்து விடுபட கூடியவர்கள் இன்னொரு பிரச்சனையில் யாரும் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.. பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறீர்கள்.. போதையால் மனப்பிரச்சனை ஏற்படும். சட்டப் பிரச்சனை ஏற்படும். அது கடுமையா இருக்கும், போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை தான்..
போதை மருந்து பற்றி பட்டியலிடுங்கள் என்று மருத்துவரிடம் கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள் பீதியே ஏற்பட்டுவிட்டது. முதலில் மூளையின் செயல்பாடு குறைகிறது, மந்தம் ஏற்படுகிறது. செல்ஃப் கண்ட்ரோல் குறைகிறது, தனியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஏற்படும், இயல்பான பழக்கவழக்கம் மாறும், மனநிலை பாதிக்கப்படுகிறது, கோபம் வருகிறது, இதயம் பாதிக்கப்படுகிறது, நுரையீரல் பாதிக்கப்படுகிறது, கேன்சர் வருது, பக்கவாதம் ஏற்பட்டு மொத்தமாக படுக்க வைத்துள்ளது.. இதுதான் போதையின் பயணம் என்று கூறினார்..
தொடர்ந்து பேசிய அவர், இந்த போதையை விலை கொடுத்து வாங்கலாமா? இந்த அழிவு பாதையில் செல்லலாமா? இத்தகைய மோசமான வாழ்க்கை தேவையா? போதையின் இந்த கொடுமையை நாம் உணர்ந்தாக வேண்டும். விலைமதிப்பில்லாத மனித உயிர்களை இப்படி ஒட்டுமொத்தமா சிதைத்து கொள்ளக் கூடாது.. கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன், மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.. போதை என்பது அதனை பயன்படுத்தும் தனி மனிதனுடைய பிரச்சனை அல்ல, சமூகப் பிரச்சனை.. போதை என்பது முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம், சமூகத்தில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதுதான்..
ஒருவர் போதையை பயன்படுத்தி விழுந்து கிடக்கின்ற காரணத்தினால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கக் கூடாது போதை தான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுகோலாக இருக்கிறது. எத்தகைய குற்றம் செய்தவர்கள் பெரும்பாலானவர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவார்களாக இருக்கக்கூடியவர்கள் அல்லது போதை உட்கொண்ட நிலையில் இந்த குற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.