பள்ளி மாணவர்கள் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காலடிப்பட்டி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மற்றும் ஜீவா தம்பதியினரின் மகன் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் கஞ்சா போதையில் பள்ளியில் உள்ள நூலகத்தின் முன்பாக படுத்து கிடந்துள்ளார். இந்த சிறுவன் படுத்து கிடந்ததை பார்த்த சக மாணவர்கள் அவரை எழுப்பி வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் போதையில் இருந்த மாணவனுக்கும் சக மாணவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் போதையில் இருந்த சிறுவனை கைகளாலும், மண்வெட்டியாலும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.
இதனால் போதையில் இருந்த சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த மாணவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.