போதை ஊசியை பயன்படுத்திய இளைஞர்கள் மற்றும் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் பகுதியில் சிலர் போதை ஊசிகளை பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சின்னமனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சில வாலிபர்கள் போதையில் இருந்தனர். இந்த வாலிபர்கள் காவல்துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் இளைஞர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் போதை ஊசி செலுத்திக் கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், சரவணகுமார் (20), தங்கேஸ்வரன் (20), மாணிக்கம் (19) மற்றும் முகமது மீரான் (22 ) என்பது தெரிய வந்தது. இவர்களுக்கு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளரான ஜோனதன் மார்க் என்பவர் போதை ஊசிகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
இவருக்கு வினோதினி என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். இவர்கள் 2 பேரையும் காவல் துறையினர் தனிப்படை அமைத்து பிடித்தனர். இந்நிலையில் ஜோனதன் மார்க்கிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது மருந்து விற்பனை கடை வைத்து நடத்தி வரும் ஜோனதன் ஒரு வலைதளம் ஒன்றினை தொடங்கி கேரள மாநிலம், புதுச்சேரி, ராமநாதபுரம், திருச்சி, சேலம், கரூர், சிவகங்கை, திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, ஓசூர், சென்னை போன்ற பகுதிகளுக்கு போதை ஊசிகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இவர் பேருந்துகளில் உறவினர்களுக்கு மருந்து அனுப்புவதாக கூறி போதை ஊசிகளை சப்ளை செய்துள்ளார். மேலும் ஜோனதன் புனே, மதுரை, சென்னை போன்ற பகுதிகளில் இருந்து ரகசிய குறியீட்டின் மூலம் ஊக்க மருந்துகளை வாங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது.