இலங்கையில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக மந்திரி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இலங்கையில் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்கிய பின் நிலைமை ஓரளவு சீரடைந்த போதும் அதிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. இந்நிலையில் இலங்கையில் நீதி, சிறை விவகாரம் மற்றும் அரசியல் சாசன சீர்திருத்த மந்திரியான டாக்டர் விஜயதாசா ராஜபக்சே செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, இலங்கையானது ஆபத்தை விளைவிக்கும் மற்றும் தீங்கு தரக்கூடிய போதை பொருட்களின் மையமாக உருமாறி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு ஆபத்து போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து அதன் பின் அடங்கிவிடும். ஆனால் இந்த போதை பொருள் விவகாரமானது நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தலைமுறையினரையும் அழித்துவிடும். தற்போது கிடைத்துள்ள அறிக்கைகளின் படி ஏறக்குறைய 5 லட்சம் இலங்கை இளைஞர்கள் இந்த போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். இந்த எண்ணிக்கையில் அதிகமாக பள்ளி மாணவர்களும் அடங்குவர்.
இதனால் போலீசார்அதிரடி சோதனையில் ஈடுபட்டு சோதனை நடத்தி கடத்தல் கும்பலை கைது செய்துள்ளனர். இந்நிலையில் போதைப்பொருள் பறிமுதலில் ஒரு சில ஊழல் அதிகாரிகளின் செயல்பாடுகளும் இருக்கிறது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மாதிரிகள் பாதுகாக்கப்படுகிறது. பின்னர் அவற்றை விரைந்து அழிக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறியுள்ளார். அந்த வகையில், 9 மாகாணங்களில் போதை பொருள் ஒழிப்பு முகமை செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.