அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளுக்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள், உடல் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தரக்கூடாது என்பதை வலியுறுத்தியும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கொரியர் மூலம் கடத்தப்படுவதையும் தடுப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையகரத்தில் புதன்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பொதுநகர காவல் துறையின் வடக்கு கூடுதல் காவல் ஆணையர் டி எஸ் அன்பு தலைமை வகித்துள்ளார். மேலும் தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா வடக்கு மண்டல இணை ஆணையர் எஸ் ரம்யபாரதி போன்ற முன்னிலை வகித்துள்ளனர். கூட்டத்தில் மருந்து கடை உரிமையாளர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் வழங்கிய அறிவுரையின் போது, அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளின் போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் மயக்க மருந்துகள் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது.
மேலும் மருத்துவரின் பரிந்துரை இன்றி இந்த மருந்துகள் வழங்குவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இந்த மருந்து மாத்திரைகள் தரப்படாது என அனைத்து மருந்து கடைகளிலும் எச்சரிக்கையுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டி இருக்க வேண்டும். அனைத்து மருந்து கடைகளிலும் சாலைகளை நோக்கியும் மருந்து கடைகளுக்குள்ளும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்து இருக்க வேண்டும். மேலும் தூக்கத்தை வரவழைக்கக் கூடிய மருந்துகளை வாங்குவதற்கு சிறுவர்கள் மருத்துவரின் பரிந்துரை கடிதம் கொண்டு வந்தாலும் அவர்களிடம் அந்த மருந்துகளை வழங்கக் கூடாது அது மட்டுமல்லாமல் போதை தரும் மருந்து மாத்திரைகளை யாருக்கும் மொத்தமாக வழங்கக் கூடாது. மேலும் போதை தரும் மருந்து மாத்திரைகள் கேட்டு தொந்தரவு செய்து மிரட்டும் நபர்கள் பற்றி காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதேபோல கொரியர் நிறுவன நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுரையில் பார்சல்கள் பதிவு செய்யப்படும்போது அனுப்புநர் பெறுநர் போன்றோரின் முகவரி அடையாள ஆவணங்கள் சரிபார்த்த பின்னரே பார்சல்கள் பதிவு செய்யப்பட வேண்டும். பார்சல்களில் அனுப்பப்படும் பொருட்களின் விவரம் அதற்கான ஆவணங்கள் சரி செய்த பின்னரே பதிவு செய்யப்பட வேண்டும்.மேலும் உள்நாட்டு சர்வதேச பார்சல் அனுப்பும்போது அனுப்புனர் புகைப்படத்துடன் கூடிய விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். கொரியர் நிறுவனங்களின் மைய அலுவலகங்களில் ஸ்கேனர் கருவிகள் மூலமாக பார்சல்களில் போதை பொருட்கள் போன்ற சட்டவிரோதப் பொருட்கள் கடத்தப்படுகின்றதா என்பதை சோதனை மேற்கொள்ள வேண்டும். கொரியர் நிறுவனங்களின் அலுவலகங்கள் கிடங்குகளில் சாலையை நோக்கியும் உட்புறத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பொருத்திருக்க வேண்டும். அதேபோல பார்சல்கள் டெலிவரி செய்யும் போது பெறுநர் பெயர் கொண்டவரை பொருளை பெறுகின்றாரா என ஆவணங்களை சரிபார்த்து டெலிவரி செய்ய வேண்டும். பார்சல்களில் சந்தேகப்படும்படியான பொருட்களை அல்லது சட்டவிரோதமான பொருட்களையோ கண்டறிந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இந்த நிலையில் காவல்துறையின் அறிவுரைகள் மீறி போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு துணை புரியும் கோரியர் பார்சல் நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.