போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவரை கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலாளர் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை, ராயப்பேட்டை பெரியார் திடல் அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தவர் ராஜ்(45). இவருக்கு கலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளார்கள். ராஜ் ஆட்டோக்கு மேற்கூரை அமைக்கும் பணி செய்து வந்துள்ளார். ராஜ்க்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் அவருடைய குடும்பத்தினர் அவரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள மெட்ராஸ் மறுவாழ்வு மையம் என்ற போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள்.
இதையடுத்து ராஜ் மூன்று மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றுவிட்டு கடந்த 2ஆம் தேதி வீட்டிற்கு திரும்பினார். இதனையடுத்து அவர் இனிமேல் மது குடிக்க மாட்டார் என்று அவரது குடும்பத்தினர் நம்பினார்கள். ஆனால் வெளியே வந்தவுடன் மீண்டும் மது குடிக்க ஆரம்பித்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. அவரின் குடும்பத்தினர் போதை மறுவாழ்வு மையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இத்தகவலின்பேரில் அந்த மையத்தின் ஊழியர்கள் வீட்டிற்கு வந்து ராஜை அழைத்து சென்றுவிட்டனர். இந்நிலையில் ராஜ் இறந்ததாக போதை மறுவாழ்வு மையத்திலிருந்து குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின்பேரில் ராஜின் மனைவி கலா, மற்றும் அவரது உறவினர்கள் மறுவாழ்வு மையத்திற்கு சென்றனர். அப்போது ராஜ் ரத்த காயத்துடன் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கலா சென்னை அண்ணாசாலை காவல்நிலையத்தில் தன்னுடைய கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து புகார் கொடுத்துள்ளார். மேலும் மறுவாழ்வு ஊழியர்கள்தான் தனது கணவரை அடித்துக் கொன்று விட்டார்கள் என்று குற்றம் சொன்னார்.இதனையடுத்து சந்தேக மரணம் என்ற கோணத்தில் அண்ணாமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் முடிவில் ராஜ் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த மறுவாழ்வு மையம் அரசு அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்துள்ளது.இதனையடுத்து கொலை வழக்கு பதிந்து அந்த மையத்தின் மேலாளரான பெரம்பலூரை சேர்ந்த 34 வயதுடைய மோகன், ஊழியர்கள் ஓட்டேரி கொசப்பேட்டையை சேர்ந்த யுவராஜ்(26), பாரிமுனையை சேர்ந்த செல்வமணி(36), சூளையை சேர்ந்த சதீஷ்(29), ராயப்பேட்டை சேர்ந்த கேசவன்(42), நெற்குன்றத்தை சேர்ந்த பார்த்தசாரதி (23), தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த சரவணன் ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.