விமான சேவை நிறுவனம் வியட்ஜெட் தனது விமான சேவையை இந்தியாவில் செயல்படுத்தி வரும் நிலையில் அவ்வப்போது பயணிகளுடைய வசதிக்காக பல்வேறு அதிரடியான சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக விமான சேவை தொடங்கிய காலத்தில் அறிமுக சேவையாக மூன்று நாள் புக்கிங் திட்டத்தின் கீழ் வெறும் ஒன்பது ரூபாய்க்கு டிக்கெட்டுகளை வழங்கியது. இதனை அடுத்து வெளிநாட்டு பயணம் செய்ய விரும்பும் பயணிகளை கவரும் விதமாக டிக்கெட் விலையை அதிரடியாக குறைத்து பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது விமான டிக்கெட்டில் அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது.
அதன்படி, வியட்ஜெட்(Vietjet) நிறுவனம் வெறும் ரூ. 9-க்கு இந்தியா-வியட்நாம் வரை விண்ணில் பறக்கலாம் என்று அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. வியட்ஜெட் அறிவித்துள்ள ரூ.9 டிக்கெட்களை பயன்படுத்தி டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கும், வியட்நாமில் ஹனோய், ஹோ சிமின் சிட்டி, டா நாங் மற்றும் ஃபூ குவோக் ஆகிய நகரங்களுக்கும் பயணிக்கலாம். இந்த சலுகை ஆக. 15, 2022 முதல் மார்ச் 26, 2023 வரை உள்ளது.