வேலூர் மாவட்ட காவல் சரக டிஐஜி யாக ஆனி விஜயா இருக்கிறார். இவர் ஒரு நேர்மையான அதிகாரி என்றும், தனக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை திறமையாக செய்து முடிப்பதில் வல்லவர் என்றும் காவல்துறை தரப்பில் பரவலாக பேச்சு இருக்கிறது. இந்நிலையில் டிஐஜி ஆனி விஜயா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு புதிதாக பணியிடம் ஒதுக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியல் வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா, வேலூர் சரக டிஐஜி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஆனி விஜயா பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் கைத்தறி அமைச்சர் காந்தி என்று கூறப்படுகிறது. ஏனெனில் வாலாஜா பகுதியில் மணல் திருட்டு அதிக அளவில் நடைபெறுகிறது. இதை தடுப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி இன்ஸ்பெக்டர் காந்தியப்பனை டிஐஜி ஆனிவிஜயா பணியிட மாற்றம் செய்தார். இதனால் அமைச்சர் காந்தி டி.ஐ.ஜி ஆனி விஜயாவுக்கு செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டர் பணியிடமாற்ற ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு டிஐஜி காவல்துறை விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்றும், என்னுடைய எல்லையில் பிரச்சனை என்றால் நான்தான் பதில் சொல்ல வேண்டும் என அமைச்சரிடம் கூறியுள்ளார். இந்த விவகாரம் மேல் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால்தான், டிஐஜி ஆனிவிஜயா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது பரவலாக பேசப்படுகிறது.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அரசியல் வட்டாரங்கள் நிதி நிறுவன மோசடியில் டிஐஜி மெத்தனமாக செயல்பட்டதால்தான் பணியிடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், நேர்மையான ஒரு அதிகாரியை அமைச்சரின் கேடுகெட்ட செயலால் பணியிடமாற்றம் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று சிலர் இணையதளத்தில் கொந்தளித்துள்ளனர்.