Categories
உலக செய்திகள்

போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்…. இலங்கையில் திடீர் பரபரப்பு….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்றியமையா பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தீவைப்பு, வன்முறை ஆகியவற்றால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருள், மின்சாரம், உணவு பொருள் ஆகியவற்றின் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல வாகனங்களும் இந்தப் போராட்டத்தில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அதேசமயம் காவல்துறையினர் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை விசாரணையின்றி நெடுங்காலம் சிறையில் அடைக்கவும், கைது செய்யவும் கூடுதல் அதிகாரங்கள் பாதுகாப்பு படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று (ஏப்.2) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (ஏப்.4) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் மிகப்பெரிய அளவிலான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் இலங்கை அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டில் போராட்டங்களை திட்டமிடுவதற்கு மக்களை திரட்டுவதை தடுக்கவும், தவறான தகவல்களை தடுக்கும் முயற்சியாகவும் யூடியூப், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களுக்கான அணுகலையும் இலங்கை அரசு முடக்கியுள்ளது.

இதனால் ஓரளவுக்கு போராட்டம் தணிந்துள்ளது. இந்த நிலையில் இன்று பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடைய போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதாகவும், மாணவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |