ரஷ்யாவில் பல வணிக நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்தி வைத்துள்ள நிலையில் அந்நாட்டின் பிரதமர் இது தொடர்பாக புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 15 நாளுக்கும் மேலாக போரை தொடுத்து வருகிறது. இதனால் உலக நாடுகள் ரஷ்யாவிற்கு உக்ரைன் மீதான போரை முன்னிட்டு கண்டனம் தெரிவித்து வருகிறது. இவ்வாறு இருக்க அமெரிக்காவின் பணப்பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உக்ரேன் மீதான போரை முன்னிட்டு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனமும் தங்களது செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து டிக் டாக் நிறுவனம் ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அந்நாட்டில் டிக் டாக் நேரடி ஒளிபரப்பை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் தங்களது ஒளிபரப்பு சேவையை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி நியூயார்க்கை தலைமையகமாகக் கொண்ட அமெரிக்க பன்னாட்டு தொழில் நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் ரஷ்யாவில் தங்களது அனைத்து விதமான வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் அமேசான் நிறுவனம் ரஷ்யா மற்றும் பெலாரஸை தளமாகக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு சில்லறை தயாரிப்பு வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு பிரைம் வீடியோவுக்கான அணுகலையும் இனி நாங்கள் வழங்க மாட்டோம் என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய பிரதமர் மைக்கேல் இது தொடர்பாக தங்கள் நாட்டில் சட்டமொன்று இயற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதாவது வெளிநாட்டு உரிமையாளர்கள் நியாயமற்ற முறையில் நிறுவனத்தை மூடினால் அவர்களது சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு வேலை செய்ய விரும்பும் மாற்று நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி உரிமையாளர்கள் நிறுவனத்தை மூடும் சமயத்தில் அவர்களின் மீதான அரசாங்கத்தின் நடவடிக்கைகள், சொந்தக்காரர்களின் முடிவைப் பொறுத்து நிறுவனத்தின் எதிர்கால தலைவிதியைத் தீர்மானிக்கும் என்றும் மைக்கேல் கூறியுள்ளார்.