போலியான இன்சூரன்ஸ் ஆவணத்தை தயாரித்து கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 2017-ஆம் வருடம் விபத்தில் பலியாகி இறந்துள்ளார். இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் மணிகண்டன் ஆட்டோ மோதி இறந்ததாக தெரிவித்து அவருடைய குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ18 லட்சம் இழப்பீடு தொகை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால் இழப்பீடு தொகையை வழங்கபடாததால் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்ஷூரன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் அம்மாபேட்டையில் வசித்த செந்தில் என்பவர் மற்றொரு ஆட்டோவின் இன்சூரன்சை பயன்படுத்தி பொய்யான ஆவணத்தை தயாரித்து இழப்பீடு தொகையை கேட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து போலியான இன்சூரன்ஸ் தயாரித்த ஆட்டோவின் உரிமையாளர் செந்திலை காவல்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து செந்திலிடம் நடத்திய விசாரணையில், அம்மாபேட்டையில் வசித்த சங்கர் என்பவர் ரூ 35,000 வாங்கிக் கொண்டு மற்றொரு ஆட்டோவின் இன்சுரன்ஸ், ஆர்.சி புத்தகத்தை போலியாக தயாரித்துக் கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.