கன்னியாகுமரி மாவட்ட கிளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, எனது பெயரில் புகைப்படத்துடன் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சமூகவிரோதிகள் எனது நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில் இந்த கணக்கை தொடங்கி பலருக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். மேலும் அதில் பண உதவியும் கேட்டுள்ளனர். இதனால் சிலர் என்னை தொடர்பு கொண்டு இது உண்மையா? என கேட்டபோது அது சமூக விரோதிகளால் உருவாக்கப்பட்ட போலியான இன்ஸ்டாகிராம் என தெரிவித்து, உதவி செய்யும் நோக்கத்தில் பணம் போடாதீர்கள் என கூறினேன்.
அப்படி பணம் வாங்கினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. எனது பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து வரும் குறுந்தகவலுக்கு நான் பொறுப்பு இல்லை. அதற்கு யாரும் பதில் கூற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டதாகவும், போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.